நல்ல நாட்களையும், தீய நாட்களையும் பிரிப்பதற்காக நமது முன்னோர்கள் திதி, வாரம் ,நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய பஞ்ச(ஐந்து) அங்கங்களை வகுத்துள்ளார்கள். இவையே ‘பஞ்சாங்கம்’ என்கிறோம். மேலும் காலப் பிரகாசிகை, கால விதானம் போன்ற அரிய நூல்களிலும் தீய வாரங்கள், திதிகள், நட்சத்திரங்கள், மரணயோகங்களுக்கு சில விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. அவை..
- மரண யோகம் ஆரம்பித்து 9 நாழிகைக்கு மேல் அதிகத் தோஷம் கிடையாது
- அஷ்டமிக்கும் செவ்வாய்கிழமைக்கும் நடுப்பகலுக்கு மேல் தோஷம் கிடையாது
- சுப திதி,நட்சத்திரங்கள் இருந்தால் வார தோஷம் கிடையாது
- இரவுக்கு வார தோஷம் கிடையாது
- உதய காலத்தில் திதி தோஷம் கிடையாது
- நடு பகலில் நட்சத்திர தோஷம் கிடையாது
- திதியை காட்டிலும் வாரம் பலம் உடையது, வாரத்தை காட்டிலும் நட்சத்திரம் பலம் உடையது, நட்சத்திரத்தை காட்டிலும் லக்கினம் பலம் உடையது, லக்கினத்தில் குருவோ சுக்கிரனோ இருந்தால் எல்லா வகை தோஷங்களையும் போக்குவர்.
- இரவிலும் ,அதிகாலையிலும் நவமி தோஷம் கிடையாது.
முகூர்த்த நாள்
சகல சுபகாரியங்களும் அன்றைய தினம் செய்யலாம்.
சுப நாள்
ஆடி ,புரட்டாசி ,மார்கழி மாதமானாலும்,நல்ல திதி ,நல்ல நட்சத்திரம்,நல்ல யோகம் இருந்தால்அன்றைய தினம் சுப நாளாகும்.
நல்ல நாள்
கிழமை எதுவாக இருந்தாலும் நட்சத்திரம் எதுவாக இருந்தாலும் நல்ல யோகமும் நல்ல திதியும் இருந்தால் அன்றைய தினம் நல்ல நாள் ஆகும் அவசியமான சுபகாரியங்களை அன்றைய தினங்களில் செய்யலாம்.
சுமாரான நாள்
அசுபமும், சுபமும் கலந்த சுமாரான நாள். அன்றைய தினம் மிக மிக அவசரமான அவசியமான சுப காரியங்களை மட்டும் செய்யலாம்.
அசுப நாள்
மரணயோகம், அசுபத்திதி, அசுப நட்சத்திரமிருந்தால் அன்றைய தினம் அசுப நாளாகும். அன்றைய தினம் முடிந்தவரை சுப காரியங்களை தவிர்க்க வேண்டும்.
வாஸ்து நாள்
கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் எதுவாக இருந்தாலும், வாஸ்து புருஷன் நித்திரை விட்டு போஜனமும், தாம்பூல தாரணமும் செய்யும் வேளையில் வீடு, வாசல் கால் வைத்தல், கிரக ஆரம்பம் செய்தல் ஆகியவை செய்யலாம்.
கரி நாள்
சுப காரியங்கள் தவிர்க்க வேண்டும்.
தனிய நாள்
சுப காரியங்கள் தவிர்க்க வேண்டும்.
ஜென்ம நட்சத்திரத்தில் செய்ய தகுந்தவை
கல்வி கற்றல், உயர் பதவியேற்றல், நிலம், சொத்து வாங்குதல், உபநயனம் செய்தல், யாகம் செய்தல், அன்னதானம் செய்தல், கிரகப்பிரவேசம் செய்தல், கிரகாரம்பம் ஆகியவை ஜென்ம நட்சத்திரத்தில் செய்யக்கூடிய காரியங்களாகும்.
ஜென்ம நட்சத்திரத்தில் செய்யக்கூடாதவை
மருந்து உண்ணுதல், விவாகம் செய்தல், சீமந்தம் செய்தல், சாந்தி முகூர்த்தம் செய்தல் ஆகியவை ஜென்ம நட்சத்திரங்களில் செய்யக்கூடாது.