சுபிட்சகரமான குரோதி வருடம், சித்திரை மாதம் 1ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டிதிதி, திருவாதிரை நட்சத்திரம், சித்த யோகம் கூடிய சுபதினத்தில் (14.4.2024) பிறக்கிறது.
அதேசமயம், சூரியன் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்குச் செல்லும் நேரமே மாதப்பிறப்பு எனக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில், சூரியன் மீனத்தில் இருந்து மேஷம் ராசிக்குச் செல்லும் நேரம் முதல் நாளான 13.4.2024, சனிக்கிழமை இரவு 8.26 மணிக்கு நிகழ்வதால், சித்திரை மாதப்பிறப்பு அப்போதே பிறந்துவிடுகிறது. அந்த சமயத்தில் உள்ள கிரஹ நிலையாக, கும்பத்தில் சனிபகவான் ஆட்சியில் இருப்பதும், அவருடன் செவ்வாய் சேர்ந்து இருப்பதும் கவனிக்கவேண்டியதாகிறது. ஆண்டு பிறக்கும் நேரமான இந்த நேரம் விருச்சிக லக்னம்,சனி ஹோரை என்பதும் கணக்கிடவேண்டியதாக உள்ளது. அதோடு சித்திரை மாதம் 18ம் தேதி (1.5.2024) குருபகவான், மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்குப் பெயர்ச்சியாவதும், ரிஷபம் குருபகவானின் பகைவீடு என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டியதாக இருக்கிறது.
கோரக் குரோதிதனில் கொள்ளை மிகும் கள்ளரினால்,
பாரிற் சனங்கள் பயமடைவார்-கார்மிக்க அற்ப மழை பெய்யும்
அஃகங்குறையுமே சொற்ப விளைவு உண்டெனவே சொல்!
இடைக்காடர் சித்தரால் எழுதப்பட்ட இந்த வெண்பா, குரோதி வருடத்தின் பலன்களை எளிதாகச் சொல்கிறது. அதன்படியும், இந்த ஆண்டில் அமையும் கிரஹநிலைகளின்படியும்… இந்தக் குரோதி ஆண்டில் இயற்கையின் வளம் சீராக இருக்கும். என்றாலும் மழை நீர் சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் ஆக்ரமிப்புகள் அகற்றம் என்று போதுமான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுப்பதன் மூலமாக மட்டுமே, கிட்டக்கூடிய நன்மைகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். பெய்யும் மழையில் சேமிப்பதைவிட, வீணாவதே அதிகமாக இருக்கும்.
உலகம் முழுக்க தீவிரவாத அச்சம், பகைநாடுகளின் பயமுறுத்தல் என பதட்டம் ஏற்பட்டாலும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளால் அச்சுறுத்தல்கள் • தடுக்கப்படும். அரசியல், கலை என சகல வகைகளிலும் உள்ள உலகப் பிரபலங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதும், அவர்கள்உடல்நலத்தில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும். அரசியலில் மாற்றமும், அதனால் மக்களுக்கு நன்மையும் ஏற்படும். அதேசமயம் விளை பொருட்கள் விலை ஏற்றத்தாலும், அரசு விதிக்கும் புதிய வரிகளாலும் பொதுமக்களுக்கு சங்கடங்களும் ஏற்படும். பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். மக்கள் கையிருப்பை முறையாக சேமிப்பதும்,செலவழிக்க யோசிப்பதுமே நன்மை தரும்.
புதுவகை நோய்களின் தொற்று இந்த ஆண்டில் தலையெடுக்கும். அதேசமயம் அதற்கான மருத்துவம் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் நலம் காக்கப்படும். தகுந்த பாதுகாப்பு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை சீராக இருக்க வழிவகை செய்யப்படும்.
வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் கடுமையாக்கப்படும். நீதி, நேர்மையாக நடப்போர்க்கு நன்மைகள் தொடர்ச்சியாக இருக்கும். மக்களிடையே பக்தி மார்க்கத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதேசமயம், சட்டென்று
உணர்ச்சிவசப்படுதலால் மதச் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வலைதளச் செய்திகளால் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, நிதானத்தைக் கடைபிடித்தால், ஒற்றுமையும் சுமுகமான சூழலும் நிலவும்.
அரசியலில் ஸ்திரத்தன்மை நிலவும் என்றாலும் வேண்டாத சச்சரவுகளும், அதனால் ஒருவித குழப்பமும் தொடர்ந்து நிலவும்.
இந்த வருடத்தில் சங்கடங்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்க ஆண்டின் ஆரம்பத்திலேயே அவரவர் குலதெய்வத்தை வழிபடுவது நல்லது. பழைமையான கோயில்களில் விளக்கேற்ற எண்ணெய் வாங்கித் தருவது, மகான்கள் திருத்தலத்துக்குச் சென்று அங்கே அன்னதானம் செய்வது, ஏழை எளியவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வது இவையெல்லாம் நாடும் வீடும் நன்றாக இருக்க, எளிமையான அதேசமயம் மிகவும் சக்திவாய்ந்த பரிகாரங்கள்.
இயற்கையைச் சீரழிக்காமல் இருப்பதும்; பெற்றோர் பெரியோரை மதித்து நடப்பது, நீதி நியாயத்தைக் கடைபிடிப்பது, சகோதர உணர்வுடன் பிறரோடு பழகுவது, எப்போதும் நல்லதை நினைத்து, நல்லதையே செய்வது இவை யாவும் இந்தக் குரோதி வருடம் முழுக்க, எல்லா நாளும் நல்லநாளாக இருக்கச் செய்யும்.