இன்றைய நாள் சிறப்புகள்
சிவனுக்கு ‘சோமசுந்தரன்’ என்று ஒரு திருநாமம். சோமன் என்பது சந்திரனை குறிக்கும். ஒவ்வொரு சோமவாரமும் திங்கட்கிழமை சிவனுக்கு விசேஷமான நாள். எனினும் கார்த்திகை மாத சோமவாரம் வெகு சிறப்பு. அதுவும் நான்காவது சோமவாரம் அற்புத பலன்களை தரக்கூடியது.
குஷ்டரோகத்தால் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன் இந்த விரதத்தை கடைபிடித்து விமோசனம் பெற்று சிறப்பு பெற்றான். அவனுக்கு சிவபெருமான் அருள் புரிந்ததுடன் அவனை தனது முடி மேல் சூடிக்கொண்டு ‘சந்திரசேகரர்’ என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகினி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தை கடைபிடித்தால் அன்று முதல் பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும் நோய் நொடிகள் இல்லாமல் இருக்கவும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர்.
சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி யாகசாலைகளில் வைத்து வேல்வி செய்து அந்நீரால் சிவபெருமானுக்கு திருமுழுக்காட்டுகின்றனர்.
கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தை தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் சந்திரசேகரமூர்த்திக்கு வெண் மலர்கள் சூட்டி, வெண்பட்டு அணிவித்து வழிபட்டால் ஆயுள் விருத்தி அடைவதுடன், மன அமைதி கிட்டும். வம்சம் தழைக்கும்.