விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
குரு பகவான், சூரியன் மற்றும் கேது ஆகிய கிரகங்கள் அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும். ஆவணி 15-ம் தேதியிலிருந்து, புதனும் சாதகமாக மாறுகிறார்.
இம்மாதம் கவலை தருவது, ராசிக்கு அர்த்தாஷ்டகத்தில், வக்கிர கதியில் உள்ள சனி பகவானின் சஞ்சார நிலைதான். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். எவருடனும் சண்டை சச்சரவில் ஈடுபடக்கூடாது. எத்தகைய தருணங்களில் நமக்கு எவ்வித ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை முன்கூட்டியே நமக்கு எடுத்துக் கூறி, அந்த ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற உதவுகிறது “ஜோதிடம்” எனும் விஞ்ஞானப் பூர்வமான அற்புதக் கலை!!
பூர்வ புண்ணியஸ்தானமாகியமீனராசியில் நிலைகொண்டுள்ள ராகுவின் நிலை, நம் குழந்தைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. சில இளைஞர்களுக்குத் தவறான பழக்க வழக்கம் உள்ளவர்களுடன் சேர்க்கை ஏற்படக்கூடும். அந்த நட்பு, இளைஞர்களின் வாழ்க்கையைப் பாழாக்கி விடும்.
அர்த்தாஷ்டகத்தில், சனி பகவான் சஞ்சரிப்பதால், சிறு விபத்துகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. சாலையில் நடக்கும்போதும், வாகனங்களை ஓட்டும்போதும், கவனமாகவும், நிதானமாகவும் இருப்பது மிக, மிக அவசியம்.
குரு பகவான், சுப பலம் பெற்றிருப்பதால், திருமண முயற்சிகளுக்கு ஏற்ற மாதம் இந்த ஆவணி.
திருநள்ளாறு,திருக்கொள்ளிக்காடு காளகஸ்தி, கர்நாடகாவில் நாக மங்களா ஆகிய சக்தி வாய்ந்த ராகு சனி பகவான் தோஷ நிவர்த்தி திருத்தலங்களில் ஏதாவது ஒன்றில் நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு தரிசித்து விட்டு வந்தால் போதும்.