அஷ்டமி பிரதட்சணம்
“கல்லினுள் சிறுதேரைக்கும் கருப்பையாடத்து உயிர்க்கும் புல்லுண வளித்துக் காக்கும் புனத் துழாய்க் கண்ணி யண்ணல்” என்று இறைவனைச் சொல்வார்கள். உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவபெருமான் உணவுப் படியளக்கும் திருவிழாவே. அஷ்டமி பிரதட்சண சுவாமி புறப்பாடு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரிஷப வாகன சட்டத்தேர் உலாவாக கொண்டாடப்படுகிறது.
ஒரு சமயம், பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. அதாவது ‘அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு அளிக்கிறாரா? இல்லையா?’ என்று மனதுக்குள் கேள்வியை எழுப்பியவாறு இருந்தாள்.
சோதனை செய்தே பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி ஒரு எறும்பை எடுத்து குவளைக்குள் போட்டு அடைத்து வைத்துவிட்டாள் பார்வதிதேவி.
சிவபெருமான் அன்றைய தினம் படியளக்கச் சென்று விட்டு திரும்பி வந்தார். அவரை இடை மறித்த பார்வதி. ‘அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே. இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்துவிட்டீர்களா?’ என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள் ‘ஆம். அதில் உனக்கென்ன சந்தேகம்..?’ என்று சிவபெருமான் பதிலளித்தார்.
இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பார்வதி தேவி, எறும்பை அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக் குடுவையை திறந்து பார்த்த போது, அதற்குள் இருந்த எறும்பு. ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண் டிருந்தது. பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிவபெருமானை மடக்க நினைத்தவர் திகைத்து விட்டார். அதனை தொடர்ந்து சிவபெருமானடம் பார்வதி தேவி மன்னிப்பை வேண்டினார். இந்தத் திருவிளையாடல் நடந்த நாள் – மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள்.
இன்றைய தினம் அருள்மிகு மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி வீதிகளில் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள் இழுத்து வருவார்கள்.