ரிஷபம்
(கிருத்திகை 2ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
ஜென்ம ராசியில் குருவும், செவ்வாயும் அமர்ந்துள்ள நிலையில், சுக்கிரனும் சாதகமாக இல்லை! வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். இருப்பினும், செலவுகள் அனைத்தும் சுபச் செலவுகளாகவே இருப்பது மனத்திற்கு நிறைவையளிக்கும்.
ரிஷப ராசியில் செவ்வாயும், அர்த்தாஷ்டக ராசியில் சூரியனும் சஞ்சரிப்பதால், உஷ்ண சம்பந்தமான உபாதைகளும், சருமக் கோளாறுகளும் சோர்வை ஏற்படுத்தும்.
லாப ஸ்தானத்தில் ராகு உதவிகரமாக சஞ்சரிப்பதால், நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் நெருக்கடியான சமயங்களில் உதவி செய்வார்கள். திருமண முயற்சிகளில் வரன் அமைவதில் சிறு, சிறு பிரச்னைகள் ஏற்படும்.
பூர்வ புண்ணிய ராசியில், மோட்ச காரகரான கேது அமர்ந்திருப்பதால், தீர்த்த, தல யாத்திரைகள் சித்திக்கும். ஆவணி 10-ம் தேதி வாக்கு ஸ்தானத்திற்கு செவ்வாய் மாறுவதால், பிறருடன் வாக்குவாதம் செய்தல், முன் கோபம், பிடிவாதம் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். குடும்பத்திலும் ஒற்றுமை குறையும்.
பரிகாரம்:
தினமும் மாலையில் கந்தர் சஷ்டி கவசம் படித்து வரவும். கைமேல் பலன் கிட்டும். பக்தியுடன் கேட்டாலும் பலன் கிட்டும். இயலாதவர்கள் ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்தாலும் அல்லது லிகித ஜபமாக எழுதி வந்தாலும் மகத்தான புண்ணிய பலன் கிட்டும்.