இயற்பகை நாயனார் குரு பூஜை-23.12.2024
இயற்பகையார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். “இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை வர்ணிக்கிறது. சோழநாட்டிலே காவேரிசங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்தார். வணிக குலத்தினரான அவர், தம் வணிகத் திறத்தால் பெரும் செல்வராக விளங்கினார்.
சிவனடியார் யாவரெனினும் அவர் வேண்டுவதை இல்லையெனாது கொடுக்கும் வள்ளலாய் வாழ்ந்து வந்தார். அவர் பெருமையை உலகோர்க்கு உணர்த்த சிவபெருமான் திருவுளம் பற்றினார்.
சிவபெருமான், தூய திருநீறு அணிந்து வேதியர் கோலத்தில், இயற்பகையாரது வீட்டினை அடைந்தார். நாயனார், அன்புடன் எதிர்கொண்டு, வரவேற்றார். வேதியர் அன்பரை நோக்கி, சிவனடியார்கள் வேண்டியனவற்றை எல்லாம் ஒன்றும் மறுக்காத உம்மிடத்திலே. ஒரு பொருளை விரும்பி இங்கு வந்தேன்; அதனை நீர் தரு வதற்கு இணங்குவீரா? விருப்பமிருந் தால் சொல்வீர். இல்லை… வந்த வழியே செல்வேன்” எனக் கூறினார். அது கேட்ட இயற்பகையார். “என்னிடமிருக்கும் எப்பொருளாயினும் சிவனடியாரது உடைமை. இதில் சிறிதும் சந்தேகமில்லை. நீர் விரும்பியது என்ன. என்னிடம் இருந்தால் தருவேன்” என்றார். அது கேட்ட வேதியர். “உன் மனைவியை விரும்பி வந்தேன்” எனச் சொன்னார்.
நாயனார் “எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது எனது புண்ணியப் பயனாகும்” எனக் கூறி, விரைந்து வீட்டினுள் புகுந்து கற்பிற்சிறந்த மனைவியாரை நோக்கி, “பெண்ணே இன்று உன்னை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்துவிட்டேன்” என்றார் அது கேட்ட மனைவியார், மனம் கலங்கினார். பின் தெளிந்து, தன் கணவரை நோக்கி “என் கணவராகிய நீர் இட்ட கட்டளை இதுவாயின் நான் செய்வதன்றி எனக்கு வேறு உரிமை உளதோ?” என்று சொல்லி வணங்கினார்.
இச்செய்தியை அறிந்த மனைவியாரது சுற்றத்தாரும், நாயனாரது சுற்றத்தாரும்,”இதென்ன அடாத செயல்” என வெகுண்டனர். மறைய வரை வளைத்துக் கொண்டனர். “நற்குலத்திற் பிறந்த இப் பெண்ணை இங்கேயே விட்டுவிட்டுப் போ” எனக்கூறினார். இயற்பகையார் போருக்கு வந்த தம் சுற்றத்தாரை நோக்கி, “ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப்பிழையும். இல்லையேல் என் வாட்படைக்கு இலக்காக வேண்டும்” என்று அறிவுறுத்தினார். உறவினர்கள் மறையவரை தாக்குவதற்கு முற்பட்டனர். அதுகண்டு வெகுண்ட இயற்பகையார், சுற்றத்தார் மேல் பாய்ந்து, இடசாரி வலசாரியாக மாறிமாறிச் சுற்றிவந்து அவர்களுடைய கால்களையும் தலைகளையும் துண்டித்து வீழ்த்தினார்.
பலராய் வந்தவர் மீதும் தனியாய் அகப்பட்டவர் மீதும் வேகமாய்ப் பாய்ந்து வெட்டி வீழ்த்தினார். பயந்து ஓடியவர் போக எதிர்த்தவரெல்லாம் ஒழிந்தே போயினர். எதிர்ப்பவர் ஒருவரு மின்றி உலாவித் திரிந்த இயற்பகையார். வேதியரை நோக்கி, “அடிகள் நீர் அஞ்சாவண்ணம் இக்காட்டினைக் கடக்கும் வரை உடன் வருகின்றேன்” என்று கூறித் துணைசென்றார். திருச்சாய்க்காட்டை சேர்ந்த பொழுதில், மறை முனிவர் “நீர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்” என்று கூறினார். இயற்பகையாரும் அவரை வணங்கி ஊருக்குத் திரும்பினார்.
அப்போது. மெய்ம்மையுள்ளமுடைய நாயனாரை பெருங்குரலில் அழைத்தார். “இயற்பகை முனிவா ஓலம்; ஈண்டு நீ வருவாய் ஓலம்; அயர்பிலாதானே ஒலம்; செயற்கருஞ்செய்கை செய்த தீரனே ஓலம் ஓலம்” என அழைத்தருளினார். அழைத்த பேரோசையினைக் கேட்ட இயற்பகை யார், ”அடியேன் வந்தேன்; வந்தேன்; தீங்கு செய்தார் உளராயின் அவர்கள் என் கைவாளுக்கு இலக்காகின்றார்” என்றுகூறி விரைந்து வந்தார். வான்வெளியிலே இறைவன் மாதொருபாகராக தோன்றியருளும் தெய்வக் கோலத்தைக் கண்டார். நிலத்திலே பல முறை தொழுதார்; எல்லையில்லாத இன்ப வெள்ளம் அருளிய இறை வன் உளங்கசிந்து போற்றி வாழ்த்தினார். அப்பொழுது அம்மையப் பராகிய இறைவர் “பழுதிலாததாய் உன் அன்பின் திறங்கண்டு மகிழ்ந்தோம். உன் மனைவியுடன் நம்மில் வருக’ எனத்திருவருள் புரிந்து மறைந்தருளினார். உலகியற்கை மீறிச் செயற் கருஞ் செய்கை செய்த திருத்தொண்டராகிய இயற்பகையாரின் குரு பூஜை இன்று.