குரோதி வருட [2024-2025] நவ நாயகர்கள் பலன்
ராஜா -அங்காரகன்
இயந்திரங்களின் விலை குறையும். மழை வளம் குன்றும். வீடு, மனை, நிலம் லாபம் தரும். அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். கடல் நீர் மட்டத்தில் மாறுதல்கள் ஏற்படும். இயற்கை சீரழிவு ஏற்படும். பூமியின் கீழிருந்து புதையல் கண்டுபிடிக்கப்படும். கடல்வழிப் பயணத்தின் பாதிப்புகள் ஏற்படும். தானியங்களின் விலை உயரும். போக்குவரத்தில் புதிய முன்னேற்றம் ஏற்படும். ரசாயன கழிவுகளால் விபத்துகள் நேரிடும். அயல்நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும்.
மந்திரி -சனி பகவான்
இயற்கை சோதிக்கும். மழை வளம் தாறுமாறாக இருக்கும். தொழில் உற்பத்தி அதிகரிக்கும். எல்லையில் அந்நியர் தலையீடு அதிகரிக்கும் என்றாலும் முடிவில் அது முறியடிக்கப்படும். மலை பிரதேசங்களில் நிலச்சரிவுகள், மழை அரிப்பினால் பாதிப்புகள் ஏற்படும். அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். மூத்த தலைவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும். கனரகத் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். அயல்நாடுகளில் இயற்கை சீரழிவுகள் பெருமளவு இருக்கும். புதிய நோய்கள் பரவும். அதே சமயம் அவற்றுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். பக்தி மார்க்கத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
அர்க்காதிபதி -சனி பகவான்
எதிர்பாராத இயற்கை சீற்றங்கள் ஏற்படும். மழையின் அளவு குறையும். மக்களிடையே வாங்கும் திறன் குறையும். அரசு புதுப்புது வரிகளை விதிக்கக்கூடும். விவசாயத்தில் நஷ்டம் உண்டாகலாம். உணவுப் பொருட்களின் விலை உயரும். நேர்மை, நீதி, நியாயமாக நடப்போருக்கு சங்கடங்கள் குறையும்.
சஸ்யாதிபதி – செவ்வாய்
நிலம், வீடு, மனை சார்ந்த வர்த்தகத்தில் ஏற்றம் ஏற்பட்டாலும் மக்களிடையே வாங்கும் திறன் குறையும். மழையின் அளவு சீராக இருக்காது. நீர் சேமிப்பு இல்லாத இடங்களில் வெள்ளத்தால் சேதங்கள் ஏற்படும். மலைப்பாங்கான பகுதிகளில் சரிவு நிகழும். திருடர்கள், கொடியவர்களின் அட்டகாசமும், எல்லையில் பகைவர் பயமும் தலை தூக்கினாலும் உடனுக்குடன் அடக்கப்படும். ரசாயனம், தீ சார்ந்த விபத்துக்கள் தொழிற்சாலைகளில் ஏற்பட வாய்ப்பு உண்டு. தகுந்த முன்னெச்சரிக்கை முக்கியம்.
சேனாதிபதி – சனி பகவான்
மக்களிடையே ஒற்றுமை உணர்வு அதிகரிக்கும். நேர்மை ,நீதி குறித்தான கட்டுப்பாடுகள் அரசினால் விதிக்கப்படும். ராணுவம் பலப்படும். எல்லை பகுதியில் பகை நாடுகளால் தொல்லை ஏற்பட்டாலும் அது உரிய நேரத்தில் அவை அடக்கப்படும்.
ரஸாதிபதி -குரு
பக்தி மார்க்கத்தில் நாட்டம் அதிகரிக்கும்சகோதர உணர்வு மேலோங்கும்.மகான்கள், பெரிய மனிதர்களுக்கு மரியாதை தரும் போக்கு உருவாகும். மஞ்சள், கரும்பு, மங்களப் பொருள்கள் விளைச்சல் அதிகரிக்கும். எங்கும் பசுமையான சூழல் நிலவும். மக்களிடையே பணப்புழக்கம் சீராக இருக்கும்.
தான்யாதிபதி -சந்திரன்
விவசாயத்தில் நிலையான விளைச்சல் இருக்காது. வான்வழி போக்குவரத்து அதிகரிக்கும். விண்வெளி விஞ்ஞானத்தில் இந்தியா புதிய சாதனை படைக்கும். அதே சமயம் ஆகாயத்தில் ஏற்படும் திரையால்(பனி ,மேக மூட்டம் )விமான இயக்கத்தில் தடைகள் ஏற்படும். பருவ காலத்தில் மழை பொழிவு தீவிரமாகும். வெள்ளத்தின் பாதிப்பு தாழ்வான இடங்களில் கூடுதலாக இருக்கும். பழைய மற்றும் வலுவில்லாத கட்டிடங்கள் இடிபாடு அடைந்து விபத்துக்கள் ஏற்படலாம். மக்களிடையே அன்பும், நட்புறவும் அதிகரிக்கும்.
மேகாதிபதி – சனி பகவான்
மழை காலம் தவறி பெய்யும். சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்படும். மேகம் கருத்தாலும் திடீரென கலைந்து மழை பொய்க்கும். கோடையில் வெப்பம் கடுமையாக இருக்கும். அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். திடப்பொருள்களால் லாபம் ஏற்படும். தேவையற்ற மன குழப்பமும், வேண்டாத சண்டைகளும் வரக்கூடும் என்றாலும் முடிவில் அவை தவிர்க்கப்பட்டு நிம்மதி நிலவும்.
நீரஸாதிபதி -செவ்வாய்
செந்நிற பொருள்கள் உற்பத்தி அதிகரிக்கும். தங்கத்தின் விலை உயரும். மருத்துவ கண்டுபிடிப்புகள் நிகழும். கொடிய நோய்களுக்கும் எளிய முறையில் சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்படும். பூமியில் முதலீடு செய்தவர்களுக்கு ஆதாயம் உண்டு. எதிரிகளால் அச்சம் அதிகரித்தாலும் அவை பாதுகாப்பு நடவடிக்கைகளால் அடக்கப்படும். பகை உணர்வு இல்லாத இடங்களில் சுபிட்சம் நிலவும்.