அமாவாசை
இன்று செவ்வாய்க்கிழமையாக இருப்பதாலும், அமாவாசை தினமாக இருப்பதாலும், சனி நட்சத்திரத்திற்குரிய அனுஷ நட்சத்திரமாக இருப்பதாலும், முன்னோர்களை குறித்த அமாவாசை தர்ப்பணம் இயன்ற அளவு செய்வதன் மூலமாக குடும்பத்தில் ஏற்படும் எதிர்பாராத கஷ்டங்களை குறைத்துக் கொள்ளலாம்.
இறை வழிபாடு செய்ய பல நாள்கள் இருந்தாலும் கூட முன்னோர்களை நினைத்து அவர்கள் பசியையும், தாகத்தையும் தீர்த்து ஆசீர்வாதம் பெற அமைந்த நாள் அமாவாசை நாள் ஆகும். இந்த நாளில் நாம் மற்ற வழிபாடுகளுக்கு கூட முக்கியத்துவம் தருவதில்லை. குறிப்பாக வீட்டில் கோலம் கூட போடுவதில்லை. நம்முடைய நினைவு முழுக்க நம் வீட்டில் உள்ள குல முன்னோர்களை நினைப்பதாகவே இருக்கும்.
அமாவாசை வழிபாடு என்பது சங்க காலத்தில் இருந்தே உண்டு. ஓடுகின்ற நதிகளின் கரையோரத்தில் சூரிய பகவானை சாட்சியாக வைத்துக்கொண்டு சூரியனும் சந்திரனும் சேரும் இந்த நாளில் ‘பிண்ட பித்துரு’ தர்ப்பணம் செய்வது சாலச்சிறந்தது. அப்படி செய்ய முடியாதவர்கள் அன்று வீட்டை தூய்மைப்படுத்தி விளக்கேற்றி வைத்து காலை உணவு உண்ணாது விரதம் இருந்து மதியம் தலை வாழை இலை போட்டு முன்னோர்களுக்கு உணவு படைத்த அந்த உணவின் சிறு பகுதியை பித்ரு அம்சமாக கருதுகின்ற காக்கைக்கு வைத்துவிட்டு உணவு உண்பதன் மூலமாக ஆசீர்வாதத்தை பெறலாம்.
இது தவிர இந்த நாள் லட்சுமி பிர போதின விரத தினம். இது மகாலட்சுமிக்கு உகந்த பிறந்தநாள். இந்த நாட்களில் வீட்டில் கலசம் வைத்து லட்சுமி பூஜை செய்யலாம். குறைந்தபட்சம் மகாலட்சுமி மகாவிஷ்ணு படத்திற்கு பூமாலை அணிவித்து தூப தீபங்களை காட்டி பூஜை செய்ய ஏற்ற நாள். பூஜையின் பலன் என்னவென்று சொன்னால் நமக்கு வெகு காலம் வராமல் இருந்த கடன் வசூல் ஆகும். தனம் சேரும். வறுமை அகலும் என்று பலன் கொடுக்கப்பட்டிருக்கிறது