வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரம் -2024

Spread the love

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரம் -2024

மேஷம்

சதய நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யப்போகும் சனி பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த தனலாபத்தை கொடுப்பார். பங்குச்சந்தை முதலீடுகள் மிகுந்த லாபத்தை கொடுக்கும். தங்கம், வெள்ளி வாங்கும் முயற்சிகள் பலிதமாகும். புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த திட்டமிடல்கள் மற்றும் முதலீடுகளை செய்ய ஏற்ற காலம் இது.

பெண்களுக்கு இது மிகுந்த நல்ல காலமாகும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் கூடிவரும். சனி தொடர்ந்து ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் சின்ன சின்ன ஆரோக்கிய குறைபாடுகள் வந்து விலகும். மற்றபடி பொருளாதாரம், சமூக அந்தஸ்து ஆகியவற்றில் நல்ல நிலையை காணப்படுகிறது.

குருபகவானும் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சுப நிகழ்ச்சிகள் களைகட்டும்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் :சனிக்கிழமையில் பசும்பால் அர்ச்சனை செய்து சிவபெருமானை வழிபட்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் வெற்றி அடையும்

ரிஷபம்

ராசிக்கு 10ம் இடத்தில் நிகழும் இந்த சனிபகவானின் வக்ர கதி ரிஷப ராசிக்காரர்களுக்கு நற்பலனையே மிகுதியாக வழங்கும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். இதுவரை அலுவலக ரீதியாக இருந்து வந்த குழப்பங்கள் விலகும். தெளிவு பிறக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் நிகழ வாய்ப்புண்டு.

உங்களை மட்டம் தட்டிய அதிகாரி மாறி போவார். புதிய அதிகாரி உங்கள் திறமைக்கு ஏற்ப மரியாதை தருவார். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். வீட்டில் உள்ளவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். சிலர் வீடு, மனை வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அனாவசிய செலவுகள் குறையும்.

ராசியிலேயே குருபகவான் சஞ்சரிப்பதால் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். புதிய நகைகள் வாங்கும் யோகம் வாய்க்கும். வண்டி, வாகனங்கள் மாற்றவும் ஏற்ற காலமாக திகழும். குறிப்பாக ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு மிகுந்த நற்பலன்கள் உண்டாகும்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : தட்சிணாமூர்த்திக்கு மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்ய உடல் நலம் மேம்படும்.

மிதுனம்

இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கடந்த 9 வருடங்களாக இழுபறியாக இருந்து வந்த சிக்கல் ஒன்றுக்கு தீர்வு கிடைக்கும். பொருளாதார அளவில் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள்.

வியாபாரத்திலும் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேரும் வாய்ப்பு உண்டு. புதிய மனிதர்களின் சந்திப்பால் மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.

பத்தாம் வீட்டில் இருக்கும் ராகு பகவான் உங்களை பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அலுவலகம் ரீதியாகவும் நற்பலன்கள் அதிகரிக்கும் என்றாலும், குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : அர்த்தநாரீஸ்வரருக்கு தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய மனதில் இருக்கும் பயம் விலகி நிம்மதி பிறக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு ஓரளவு நல்ல பலன்களை தந்தாலும், தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும். குறிப்பாக ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு வீண் மனக்கவலைகள் வந்து போகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் மதித்து நடப்பது நல்லது. தேவையில்லாத பழைய விஷயங்களை பேசி பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம்.

குடும்பம் தொடர்பான பிரச்சனைகளில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக புனர்பூசம், பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

பணவரவு போதுமான அளவு இருக்கும் என்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். எனவே செய்யும் செலவுகளை சுபச் செலவுகளாக மாற்றிக்கொள்ள பாருங்கள். குறுக்கு வழியில் செல்வதை விட்டுவிட்டு நேர்மையாக உழைக்க முயலுங்கள். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : சிதம்பரம் நடராஜருக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்ய உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் விலகி நன்மை நடக்கும்.

சிம்மம்

இந்த 140 நாட்களும் பல்வேறு மாற்றங்களை தரப்போகும் காலமாக அமையும். குடும்பத்தில் தேவையற்ற சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் அக்கறை அவசியம். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பொருளாதார நிலையில் மிகுந்த கவனம் தேவை. புதிய கடன்கள் வாங்கும் முன் நன்கு ஆலோசித்து செயல்படுவது அவசியம். வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும் என்றாலும் பயணத்தின் போது உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும் என்றாலும், போட்டிகளும் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : நரசிம்மரை நான்கு வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக வழிபட்டு வர உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி கிடைக்கும்.

கன்னி

சனிபகவானின் இந்த வக்கிர சஞ்சாரம் உங்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்க இருக்கிறது. இதுவரை இழுபறியாக இருந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும். பணம் பல வழிகளிலும் வரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பழைய கடன் ஒன்றைப் பைசல் செய்வீர்கள்.

புதிய வேலை, வியாபாரம் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் அன்பும், அமைதியும் நிறைந்திருக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் நிச்சயமாகும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். அலுவலக ரீதியாகவும் நல்ல பெயர், புகழ் உண்டாகும். வேலையில் இருந்த சிக்கல்கள் தீரும்.

குருபகவானின் பார்வை ராசிக்கு கிடைப்பதால், மலைபோல் வரும் பிரச்சினைகளும் பனி போல் விலகும். பெண்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் நற்பலன்களை கொடுக்கும்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வர சகல நன்மைகளும் உண்டாகும்.

துலாம்

பூர்வ புண்ணிய பலன்கள் அதிகரிக்கும் காலம் இது. பொருளாதாரம் சிறப்பாக காணப்படும். புதிய கடன் முயற்சிகள் வெற்றியாகும். பழைய கடன்களை அடைக்கவும் வாய்ப்பு பிறக்கும். அலுவலகத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.

குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குறிப்பாக சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு மிகுந்த நற்பலன்கள் உண்டாகும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு இதுவரை ஏற்பட்ட நஷ்டங்களில் இருந்து வெளிவரும் அளவுக்கு பணவரவு உண்டாகும்.

பிள்ளைகள் வகையில் அனுகூலம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் குழந்தைபேறு போன்ற சுப நிகழ்வுகள் உண்டாகும் என்றாலும், சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம். புதிய நண்பர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். சிலருக்கு அலர்ஜி தொடர்பான வியாதிகள் வந்து நீங்கும்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : காலபைரவரை வழிபட்டு வர தாய்க்கு ஏற்படும் கஷ்டங்கள் விலகும்.

விருச்சிகம்

கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் தீரும் காலமாக இந்த சனி வக்கிர சஞ்சார காலகட்டம் அமைகிறது. பொருளாதாரம் மேம்படும். இழுபறியாக இருந்து வீசா பிரச்சனை முடிவுக்கு வந்து வெளிநாடு செல்லும் யோகம் வாய்க்கும். தடைபட்டு வந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். மனதில் தைரியம் குடிகொள்ளும். குடும்பத்தில் அமைதி திரும்பும்.

கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து மோதல்கள் விலகிஅந்நியோன்யம் அதிகரிக்கும். இதுவரை கண்டு காணாமல் இருந்த உங்கள் உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். வீடு, மனை வாங்க வங்கி கடன் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். முரண்டுபிடித்த பங்குதாரர்கள் இனி ஒத்துழைப்பு தருவார்கள். தொழிலை விரிவாக்கம் செய்யவும் வாய்ப்புகள் தேடி வரும்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : வெக்காளியம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை விளக்கெண்ணெய் தீபம் ஏற்ற உங்கள் வாழ்வு வெளிச்சமாகும்.

தனுசு

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து சதய நட்சத்திரம் வரை சஞ்சாரம் செய்யும் இந்த காலகட்டம் பல பிரச்சனைகளால் தடுமாறிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு ஆசுவாசம் தரும் காலகட்டமாக அமையும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் இருந்த மருத்துவ செலவுகள் குறையும்.

மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை ஏற்படும். என்றாலும் வீண் பிரச்சனையை பேசி விவாதம் செய்ய வேண்டாம். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் நல்ல மாற்றங்கள் நிகழும்.

வியாபாரத்திலும் போட்டிகள் குறைந்து ஓரளவு லாபம் கிடைக்கும். புதிய வியாபாரங்கள் தொடங்க இது ஏற்ற காலம் அல்ல. எனவே முதலீடுகளில் கவனம் தேவை.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : தனுசு ராசிக்காரர்கள் வில் அம்பு கொண்ட திருலோக்கிக்கு சென்று மன்மதன் ரதியை பார்க்க பிரிந்தவர்கள் கூடுவார்கள்

மகரம்

அலைச்சல்கள் அதிகரிக்கும் காலம் இது. சிலருக்கு நீண்ட தூர பயணங்களும் அதனால் செலவுகளும் அதிகரிக்கும். இருந்தாலும் போதுமான பண வரவு காணப்படுவதால் பிரச்சனை இல்லை. சேமிக்க தொடங்குவீர்கள். வேலையில் நல்ல மாற்றங்கள் இருக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இடம் மாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு இப்போதைக்கு இல்லை என்றாலும் சின்ன சின்ன சலுகைகள் கிடைக்கும்.

வழக்குகள் சாதகமாகும். பல நாள் போராட்டங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படும். அவர்களின் கல்வியில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளும் வசூலாகும். கடையை விரிவு படுத்த திட்டமிடுவீர்கள்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : மதுரை சொக்கநாதருக்கு மாங்கல்ய தானம் செய்ய இழந்த செல்வங்கள் மீண்டு வரும்.

கும்பம்

கும்ப ராசிக்கு உள்ளே சனிபகவான் வக்கிரம் அடைவதால் எதிலும் நிதானம் தேவை.குறிப்பாக சதய நட்சத்திரக்காரர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பணவரவு தாமதமாகும். கேட்டிருந்த கடன் தொகையை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும். தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் இடுப்பறியே காணப்படும். எனவே வழக்கறிஞரை மாற்றும் முயற்சியை தவிர்ப்பது நல்லது.

முக்கிய பிரச்சனைகளை கையாளும்போது நிதானம் அவசியம். குடும்பத்தில் விவாதங்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. வரும் பணத்தை சேமிக்க பாருங்கள். செலவுகளில் சிக்கனம் தேவை. பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை ஏற்படும். எனவே உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆலய வழிபாடு, யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். குறுக்கு வழிகளை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : திருநள்ளாறு சென்று தர்பனேஷ்வரரை வணங்கி விட்டு வர உங்கள் வாழ்க்கை வசந்தமாகும்.

மீனம்

சனி வக்ர சஞ்சார காலகட்டத்தில் மீன ராசிக்காரர்களுக்கு விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அவற்றை நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற சுப விரய காலமாக மாற்றிக் கொள்ளலாம். வண்டி வாங்குவது மாற்றுவதற்கு உகந்த காலம் இது. பணவரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். பிள்ளைகளால் நல்ல பலன்கள் உண்டாகும். மகனுக்கு நல்ல வேலை அமையும். மகளின் திருமண முயற்சிகள் வெற்றியாகும்.

வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களை விட்டு பிடித்து செல்வது நல்லது. புதிய வியாபாரம் முயற்சிகளை தற்போதைக்கு ஒத்திவைக்கலாம். அலுவலகத்தில் மரியாதை கூடும்.. எதிர்த்தவர்கள் அடங்கிப் போவார்கள் என்றாலும், அதிகாரிகளோடு மோதல் போக்கை கைவிடுவது நல்லது. வழக்குகளில் மிதமான போக்கை கடைபிடித்து வாருங்கள்.

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள்

பரிகாரம் : காளகஸ்தி சென்றுவர கஷ்டம் எல்லாம் கலைந்து போகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top