ஜாதகத்தில் சூரியன் பலம் இழந்தவர்கள் மற்றும் சூரிய தசா- புத்தி நடப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் !

Spread the love

சூரியன்

ஒருவர் ஜாதகத்தில் ‘சூரியன்’ பாதிக்கப்பட்டிருக்கின்றார். இதனால் சூரிய பகவானுக்கு என்னென்ன காரகத்துவங்கள் கொடுத்திருக்கின்றனவோ அவை அத்தனையும் அவரது ஜாதகத்தில் பாதிக்கப்படும்.

சூரியன் தந்தை என்ற காரகத்திற்கு உரியவை ஆதலால், அந்த காரகத்துவமும் பாதிக்கப்படும். சூரியன் எந்த வீட்டில் இருக்கின்றாரோ, அந்த வீட்டிற்குரிய பலனும் சரியாக நடக்காது. இதனால் சூரிய தசையும் பாதிக்கப்படும். வேறு திசை நடந்தாலும், அதில் வரும் சூரிய புக்தியும் பாதிக்கப்படும்.

சூரியன் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருப்பதால், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், சிவன் கோயிலுக்குச் சென்று சிவனைத் தரிசித்து அதன் பிறகு நவகிரகங்களை 9 முறை சுற்றி வலம். சூரியனுக்குரிய துதியைச் சொல்லி, சூரியனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுத் திரும்புங்கள்.

துலா இலக்கினத்தில் ஒருவர் பிறந்து சூரியன் பாதகாதிபதியாகி சூரிய திசை நடக்கும் ஜாதகர் மட்டும் அதற்கானப் பரிகாரங்களையும் கடைபிடித்தால் தான் பிரச்சினை குறையும். மற்றவர்கள் பரிகாரங்களையும் வேண்டியதில்லை.

சூரியன்

பரிகாரம் ஒன்று

கிராமத்தில் உள்ளவர்கள் கண்மாய் அல்லது குளத்தில் இடுப்பளவு நீரில் நின்று கிழக்கு நோக்கிச் சூரியனைப் பார்த்து “ஆதித்ய ஹிருத்யம்” சொல்லி வணங்க வேண்டும்.

சென்னை போன்ற நகரில் இருப்பவர்கள் கடற்கரைக்குச் சென்று கடலில் முழங்கால் அளவு நின்று கொண்டு சூரியனை – நோக்கி வணங்கி ஆதித்ய ஹிருதயத்தை சொல்லி வணங்க வேண்டும்.

தினசரி அதிகாலை 6.00 மணிக்கு – “ஆதித்ய ஹிருத்யம்” மந்திரங்களை ஜபிக்கலாம். அவ்வாறு தினசரி செல்ல முடியாதவர்கள் ஞாயிற்றுக் கிழமை அன்று காலையில் சுலோகம் சொல்லி வணங்கலாம். தண்ணீருக்கு சூரியனுடைய ஆற்றலைக் கிரகிக்கும் சக்தி உண்டு. எனவே தான் மகான்கள் தண்ணீரை நம்மீது தெளித்து ஆசி வழங்குகிறார்கள். வீடுகளில் யாகம் வளர்த்து பூஜை செய்யும் போது தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்கின்றோம். கோயில்களில் கும்பாபிஷேகம் செய்யும் போது மக்கள் மீது தண்ணீரைத் தெளிக்கின்றார்கள்.

பரிகாரம் இரண்டு

அரைக்கிலோ கோதுமையை வாங்கி பொட்டலமாக பிரித்துக் கட்டி, தினசரி ஒன்பது படுத்து தூங்கும் போது தலைக்கு அடியில் வைத்துத் தூங்க வேண்டும்.

இவ்வாறு 9 நாட்கள் 9 பொட்டலங்களை வைத்து தூங்க வேண்டும். ஒன்பது நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவரை உட்கார வைத்து அனைத்து பொட்டலங்களையும் ஒரு பொட்டலமாக்கி சேர்த்து திருஷ்டி சுற்றி நீர் நிலையில் சென்று கரைத்துவிட வேண்டும். மனிதர்கள் உபயோகிக்கும் கிணற்றில் கரைக்க வேண்டாம். ஒன்பது நாட்களுக்குப் பிறகு சிவன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு வீடு திரும்ப வேண்டும்.

பரிகாரம் மூன்று

ஒவ்வொரு ஞாயிறன்றும் சிவன் கோயிலுக்குச் சென்று வணங்கி வந்த பின் கோதுமையைத் தானம் செய்ய வேண்டும். அதே போல கோதுமைத்தூள் சிறிது சிறிதாக தினசரி காகத்திற்கு வைக்கலாம்.

சூரியன்

பரிகாரம் நான்கு

ஞாயிற்றுக்கிழமையன்று வீட்டில் யாகம் வளர்த்து சூரியனுக்குப் ப்ரீதி செய்து கொள்ளலாம். முதலில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் செய்தப்பிறகு சூரியனுக்கும், சிவனுக்கும் தனியாக யாகம் செய்து கொள்ளலாம்.”

வெள்ளெருக்கு சமித்துவை யாகத்தில் ஆகுதியாகப் போடலாம். அதேப் போல கோதுமையையும் சர்க்கரைப் பொங்கலையும் யாகத்தில் ஆகுதியாகப் போடலாம். சற்று வசதி படைத்தவர்கள் சூரியனுக்குரிய மாணிக்கத்தையும் யாகத்தில் ஆகுதியாகச் செலுத்தி வணங்கலாம்.

பரிகாரம் ஐந்து

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் யோகத்தை அளிக்கக் கூடியவராக இருந்து, அதே நேரத்தில் அவர் பகை, நீசம் போன்ற நிலையில் வலிமை இழந்திருந்தால், ஒரு காரட் மாணிக்கத்தை தங்கத்தில் திறப்பு வைத்து மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளலாம்.

பலம் இழந்த ஜாதகர்கள் மட்டுமே மாணிக்கத்தை அணிந்து கொள்ள வேண்டும். ஜாதகத்தில் சூரியன் உச்சமாகவோ அல்லது ஆட்சியாகவோ இருந்தால் அணியக்கூடாது. காரணம் மாணிக்கம் உஷ்ணத்தைக் கொடுக்கக் கூடிய இரத்தினம்.

சூரியன் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ உள்ளவர்களுக்கு உடல் உஷ்ணமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் சூரியனுக்குரிய மாணிக்கத்தை அணிந்து கொண்டால் உஷ்ணம் மேலும் அதிகமாகி உடல் நிலை பாதிக்கப்படக்கூடும். எக்காரணத்தைக் கொண்டும் வசதி இருக்கிறது என்று நினைத்து இரண்டு காரட் அணியக்கூடாது.

பரிகாரம் ஆறு

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையும், மாலையும் சிவன் கோயிலுக்குச் சென்று வணங்கி வழிபட வேண்டும். சிவன் கோயிலுக்குச் சென்றுச் செந்தாமரை மலரைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அதேபோல் நவகிரக சன்னதியில் சூரியனுக்குச் செந்தாமரை மலரைக் கொடுத்து அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அதேபோல் நவகிரக சென்னதியில் சூரியனுக்குச் செந்தாமரை மலரைச் சாற்றி வழிபட வேண்டும். சிவன் சன்னதியில் தூங்கா விளக்கில் நெய் ஊற்றி வழிபட வேண்டும்.

நவகிரக சன்னதியிலும் சூரியனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறர் ஏற்றிய விளக்கிலிருந்து நீங்கள் தீபம் ஏற்றக் கூடாது.நீங்கள் எப்பொழுதும் கோயிலுக்குச் செல்லும் போது தீப்பெட்டியை எடுத்துச் செல்லுங்கள்.

வாரா வாரம் இந்த பரிகாரத்ரைக் கடைபிடிக்க வேண்டும். சூரியனுக்குரிய திருவாடுதுறை ஆதினத்திற்குக் கட்டுப்பட்டுள்ள சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்பலாம்.

உங்கள் பிரச்சினைக்குத் தினசரி நீங்கள் வணங்கி பாட வேண்டிய துதி

“காசினி இருளை நீக்கும் கதிரொளி யாகி யெங்கும் பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை

நல்கும்

வாசியே ழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்து தேசிகர எனைரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி”

சூரிய தசை நடந்தால் அல்லது வேறு ஏதாவது ஒரு திசையில் சூரிய புக்தி நடந்தால் சில வழிபாடுகளைச் செய்ய வேண்டும். இந்த தசை அல்லது புக்தி நடக்கும் காலங்களும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்துவிட வேண்டும். காலை எழுந்தவுடன் உதிக்கும் சூரியனை வணங்கி விட்டப் பிறகே மற்றக் காரியங்களைத் தொடங்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை உச்சி வேளையில் சர்க்கரை பொங்கல் வைத்து சூரியனுக்கு நிவேதனம் காட்டியப் பிறகு மற்றவர்களுக்குப் பிரசாதமாகக் கொடுத்து விட வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை செய்தால் கூட போதும். ஆதித்திய ஹிருதயம் தெரிந்தவர்கள் தசை முழுவதும் ஆதித்திய ஹிருதயத்தைப் படிக்க வேண்டும்.

சூரியனார் கோயிலுக்கு சென்று (மாயவரம் – சீர்காழிக்கு அருகில் )வழிபட்டுத் திரும்பலாம். சூரியனுக்கு உகந்த செந்தாமரை மலரால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல் செந்தாமரை நிறம் உள்ள துண்டை (துணியை) இறைவனுக்கு சாத்தி, ஏழைகள் 9 பேருக்கு தயிர் சாதம் அன்னதானமாக அளிக்க வேண்டும்.

9 சிவப்பு வண்ண இரவிக்கைத் துண்டை சுமலங்கலிகளுக்கு வழங்கிய பின் வேறு எங்கும் செல்லாமல், உங்கள் ஊருக்குத் திரும்பி விட வேண்டும்.

சூரியன்

சூரியனார் கோயிலுக்குச் செல்லும் வழி:

நவகிரக கோயில்கள் ஒன்பதுமே தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. சூரியனுக்குரிய பரிகாரத்தை செய்ய வேண்டுமென நினைப்பவர்கள் சூரியனார் கோயிலுக்குச் செல்ல கும்பகோணம் சென்று அங்கு தங்கிக் கொள்ள வேண்டும்.

அங்கிருந்து ஏறக்குறைய 15கிலோ மீட்டர் தொலைவில் சூரியனார் கோயில் அமைந்துள்ளது. கும்பகோணம் மாயவரம் (மயிலாடுதுறை)நெடுஞ் சாலையில் இந்த கோயில் உள்ளது.

ஆடுதுறை இரயில் நிலையத்திலிருந்து 1கிலோ மீட்டர் தொலைவில் சூரியனார் கோயில் உள்ளது. இங்கு மூலவரை வணங்கி விட்டப் பிறகே சூரியனை வணங்க வேண்டும்.

இறைவனுக்குச் செந்தாமரை மலரால், அர்ச்சனை செய்யலாம். செந்தாமரை நிறம் உள்ள துணியை இறைவனுக்கு சாத்தி, அபிஷேகம் அர்ச்சனை செய்து, பொங்கல் வைத்து வணங்கலாம்.

கோயிலில் வழிபட்டப் பிறகு 9 ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். கோயிலில் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது தங்கி இருந்த பிறகே ஊருக்குத் திரும்ப வேண்டும்.

நீங்கள் பரிகாரத்திற்கு எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரில் ஒரு நாள் தங்கி விட்டு மறுநாள் திரும்பினால் இன்னும் பலன் சிறப்பாக இருக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top