மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிக உயர்வானது. திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி நடராஜ பெருமானுக்கு மிகச் சிறந்த விழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு ‘திருவாதிரை திருவிழா’ என்று பெயர்.
இத்திருவிழா ஒட்டி பல சிவாலயங்களில் உள்ள நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும் அதனை தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் காண பக்தர்கள் குவிவார்கள். ஆருத்ரா தரிசனத்தை தரிசிப்பவர்களுக்கு எல்லா பாவங்களும் நீங்கி பெரும் புண்ணியம் சேரும்.
வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் சிவபெருமானின் திரு நடனத்தை காண விரும்பி அவரை துதிக்க, அவர் தன்னுடைய திரு நடனத்தை இந்த ஆதிரை நாளில் நிகழ்த்தி காட்டியதாக புராண வரலாறு. நடராஜமூர்த்திக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதில் முக்கியமான அபிஷேகம் ஆருத்ரா அபிஷேகம் ஆகும்.
உத்தரகோசமங்கை என்னும் தலத்தில் மகா அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இது தவிர மற்ற திருநடனமாடிய பஞ்ச சபைகளிலும் இந்த சிறப்பு உண்டு. திருஆலங்காடு, மதுரை, நெல்லை, குற்றாலம் முதலிய இடங்களில் உள்ள சிவாலயங்களில் அபிஷேகப் பெருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த விழாவின்போது திருவாதிரை களி படைப்பார்கள். பெருமானுக்கு விசேஷமான திருவாதிரை களியும் பல்வேறு காய்கறிகளை போட்டு கூட்டினை செய்வார்கள். களி என்பது ஆனந்தம் என்று பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெஞ்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மாவானது ஆனந்தமாக இருக்கும்.
அந்த களியைத் தரும் பிரசாதம் திருவாதிரை நாளில் நிவேதனம் செய்யப்படும். திருவாதிரை களி ஆகும். மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து ,சிவபெருமானை பூஜித்து வழிபட்டால் நல்ல மாங்கல்யம் பலம் பெருகும் பாவங்கள் நீங்கும் அறிவு ஆற்றலும் கூடும்.